Pulitzer Prize 2021: டேர்னெல்லாவின் புலிட்சர் சொல்வது என்ன?
இந்த ஆண்டு புலிட்சர் விருதுகளில் நிறைய சுவாரஸ்யங்கள். அவை அத்தனையும் ஜர்னலிசத்தின் மாற்றங்களை வெவ்வேறு வகைகளில் பிரதிபலிப்பவை. அதுவும் குறிப்பாக டேர்னெல்லா ஃபிரேஸியரின் கதை..!
அந்த சுவாரஸ்யங்கள்...
- பரபரப்பான அதிபர் தேர்தல், உலகை முடக்கிப்போட்ட கோவிட் 19 பெருந்தொற்று ஆகியவற்றைத் தாண்டி புலிட்சர் வெற்றியாளர்கள் பட்டியலில் அதிக இடம்பிடித்திருப்பவை அமெரிக்காவின் காவல்துறை அட்டகாசங்கள். மொத்தம் 15 விருதுகளில் 6 விருதுகள் அமெரிக்க காவல்துறையின் அடக்குமுறைகளைக் கேள்விக்குள்ளாக்கியவர்களுக்கே சென்றிருக்கிறது. ஜார்ஜ் ஃப்ளாய்டு சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலைகள் என்பதைத் தாண்டி இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது; அது பதிவின் பின்பகுதியில்!
- Buzzfeed தன் முதல் புலிட்சர் பரிசை வென்றேவிட்டது. `நெட்டிசன்களுக்கான கன்டென்ட் ஃபேக்டரியாக' மட்டுமே Buzzfeed-ஐ கருதிதான், ``அது என்றைக்கும் புலிட்சர் விருதெல்லாம் வாய்ப்பே இல்லை" என 2014-ல் எழுதியிருந்தார் கார்டியனின் முன்னாள் ஆசிரியரான பீட்டர் பிரஸ்டன். (இதைத்தான் விருது அறிவிப்பு வந்ததும் Buzzfeed-ன் ஆசிரியரும் ஷேர் செய்திருந்தார்) ஆனால், 2021-ல் அதை சாத்தியப்படுத்திவிட்டது Buzzfeed. ஒரு New age media-விற்கு கிடைத்திருக்கும் அங்கீகாரம் இது.
- Feature Writing பிரிவில் புலிட்சர் வென்றிருப்பது California Sunday Magazine. சோகம் என்னவென்றால், கடந்த ஆண்டு அக்டோபரில்தான் மொத்தமாக தன் பணிகளை நிறுத்திக்கொண்டது California Sunday Magazine. கோவிட் பொருளாதார இழப்பால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டு, மூடப்பட்ட ஊடகங்களுள் California Sunday Magazine-ம் ஒன்று. இந்நிலையில்தான் இந்த ஆண்டு ஆச்சர்யமாக புலிட்சர் கௌரவம் கிடைத்திருக்கிறது.
- Explanatory Reporting-ல் மொத்தம் இரண்டு பேர் பரிசு வென்றிருக்கிறார்கள். அதில் ஒருவர் The Atlantic-ஐச் சேர்ந்த எட் யோங். கொரோனாவின் தொடக்கத்திலிருந்தே அதுதொடர்பாக மிக விரிவான கட்டுரைகளை மிக மிக எளிய நடையில் எழுதியவர் எட் யோங். கோவிட் போன்ற முன்அனுபவம் இல்லாத ஒரு பேரிடரை மானுடம் எதிர்கொள்ளும்போது, அதுபற்றிய புரிதல்களை இதழியல் மூலம் ஏற்படுத்துவது சவாலானது. ஆனால், தன் ஒவ்வொரு கட்டுரையிலும் சிக்ஸர் அடித்திருப்பார் யோங். இதைவிடவும் யாங்கின் இன்னொரு செயல்தான் இன்னும் ஒருபடி மேலே போய் `வாவ்' சொல்லவைத்திருக்கிறது. தனக்கு கிடைத்த பரிசை தன் கட்டுரைகளை Fact Check செய்த, எடிட் செய்த, அதற்கு சித்திரங்கள் வரைந்த அனைவருடனும் பகிர்ந்துகொள்ளப்போவதாக அறிவித்திருக்கிறார்.
Substack, Medium போன்ற One man publishing, Direct publishing ஆகியவை ஜர்னலிசத்தின் போக்கில் பெரியளவில் தாக்கம் செலுத்திவரும் சமயத்தில், எட் யாங் செய்திருக்கும் இந்த செயலானது The Atlantic போன்ற Traditional பப்ளிஷிங் கம்பெனிகளின் முக்கியத்துவம் மற்றும் அவற்றின் பங்களிப்பு ஆகியவற்றிற்கான அங்கீகாரமாகவே பார்க்கிறேன்.
- 2020-க்கான புலிட்சர் விருதுகளில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த விஷயம் டேர்னெல்லா ஃபிரேஸியர்க்கான சிறப்பு விருது. ஜார்ஜ் ஃப்ளாய்டின் இறுதி நொடிகளை தன் மொபைலில் பதிவு செய்ததற்காக இந்த கௌரவத்தை அளித்திருக்கிறது புலிட்சர் நடுவர் குழு. பல வகைகளில் இந்த விருது முக்கியத்துவம் பெறுகிறது.
1. இதுவரை புலிட்சர் வென்றவர்களில் டேர்னெல்லாதான் மிகவும் இளையவர். 18 வயதுதான்.
2. டேர்னெல்லா எந்தவோர் ஊடகத்திலோ அல்லது ஊடகம் சார்ந்தோ பணிபுரிந்ததே இல்லை. இப்படி இதழியல் / கலை சார்ந்து இயங்காத ஒருவருக்கு புலிட்சர் வழங்கப்படுவது இதுவே முதல்முறை.
3. இதுவரையிலும் Citizen Journalism-த்திற்கு கிடைத்திருக்கும் அங்கீகாரங்களிலேயே மிகப்பெரியதாக இந்த புலிட்சர் கொண்டாடப்படுகிறது.
டேர்னெல்லாவின் புலிட்சர் சொல்வது என்ன?
Web 2.0-வின் வருகைக்குப்பின் இன்டர்நெட், ஜர்னலிசம் இரண்டுமே வெகுவாக மாற்றமடைந்தன. இதன் விளைவாக வந்த ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற பிளாட்ஃபார்ம்கள் அதுவரை ஊடகங்களிடம் மட்டுமே இருந்த Dissemination (தகவல் பரப்பும்) அதிகாரத்தை சாமானியர்களின் கையிலும் தந்தன. User Generated Content (UGC)-களின் ஆதிக்கம் தொடங்கியது. பிளாட்ஃபார்ம்களும் வளர்ந்தன. இன்டர்நெட்டின் Creative Economy-யும் உயர்ந்தது. இந்த மாற்றங்கள் ஜர்னலிசத்திலும் எதிரொலித்தன. இந்த சாமானியர்களுக்கு Citizen Journalist எனப் பெயர் சூட்டி அழைத்தது ஜர்னலிசம். புறக்கணிக்கவே முடியாத இவர்களை, தன் Journalistic Truth-க்கான பயணத்தில் உடன்சேர்த்தும் கொண்டது. இன்றைக்கு ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் அனைவருக்கும் இந்த அதிகாரம் பெற்றவர்களே. தினம்தினமும் தங்கள் வைரல் வீடியோக்களாலும், படங்களாலும் உலகில் நடக்கும் மாற்றங்களுக்கு விதையாக இருப்பதும் இவர்களே. ஆனால், அனைவருமே உலகையே திரும்பிப்பார்க்க வைப்பதில்லை. ஒருசிலரே அதை நிகழ்த்துகிறார்கள். அவர்களில் ஒருத்திதான் டேர்னெல்லா ஃபிரேஸியர்.
இன்டர்நெட் யுகத்தில் சாமானியர்களின் சக்தியை அங்கீகரிக்கும் சம்பவங்கள் டேர்னெல்லாவுக்கு முன்பே நிறைய நடந்திருக்கின்றன. உதாரணமாக 2006-ம் ஆண்டு `டைம்' பத்திரிகை செய்ததைச் சொல்லலாம். ஒவ்வோர் ஆண்டின் முடிவிலும் அந்த ஆண்டில் உலகில் அதிகம் செலுத்திய சக்திவாய்ந்த ஒரு நபரைத் தேர்ந்தெடுத்து அவரை 'Person Of the Year' ஆக அறிவிப்பது அந்நிறுவனத்தின் வழக்கம். அப்படி 2006-ம் ஆண்டு தேர்வு செய்தது வேறு யாரையும் அல்ல; உங்களைத்தான். ஆம், உங்களையேதான்!
``வளர்ந்துவரும் தகவல் தொழில்நுட்ப உலகில், ஒவ்வொரு சாமானியரும் சக்திவாய்ந்தவராகிறார். எனவே, இந்த டிஜிட்டல் உலகை மாற்றுவதும் நீங்கள்தான்" என இந்த முடிவுக்கு காரணமும் சொன்னது டைம். இந்தப் புகழ்ச்சிகள் கொஞ்சம் ஓவராகவே தெரிந்தாலும்கூட, அந்த வாதத்தில் ஓரளவு உண்மையும் இருப்பதை மறுக்கமுடியாது. அரேபிய வசந்தம், ஹாங்காங் கிளர்ச்சி உள்ளிட்ட உலகின் முக்கிய போராட்டங்களின் போதெல்லாம் சாமானியர்களின் சக்தியை, அதுவும் குறிப்பாக இணையம் அவர்களுக்கு தந்திருக்கும் அதிகாரத்தை எதிர்க்கேள்விகள் இன்றி ஏற்றுக்கொண்டது உலகம். கடந்த ஆண்டு அமெரிக்காவை உலுக்கிய #BlackLivesMatter (BLM) போராட்டங்களும் இதையே உணர்த்தின. ஆனால், டேர்னெல்லாவின் புலிட்சர் கதை சொல்லும் நீதி இது மட்டுமே அல்ல; அது இதற்கும் மேல்! அதைப் புரிந்துகொள்ள இன்னும் டேர்னெல்லாவின் கதையை, அமெரிக்க கறுப்பின மக்களின் போராட்டங்கள் குறித்து இன்னும் கொஞ்சம் விரிவாகத் தெரிந்துகொள்வது முக்கியம்.
மே 25, 2020, மினியாபொலிஸ், அமெரிக்கா.
ஸ்னாக்ஸ் வாங்குவதற்காக நகரத்தின் ஒரு கடைக்குச் செல்கிறார் டேர்னெல்லா. அப்போதுதான் அந்த இடத்தில் ஜார்ஜ் ஃப்ளாய்டு, தரையில் வீழ்த்தப்பட்டு டெரிக் சாவின் காலினால் அவர் கழுத்தை அழுத்துவதும், ஜார்ஜ் ஃப்ளாய்டு மூச்சிற்காக ஏங்குவதையும் பார்க்கிறார். இந்த சம்பவத்தை டேர்னெல்லாவோடு அங்கிருந்த மற்றவர்களும் பார்க்கின்றனர். சுற்றியிருந்தவர்கள் ஜார்ஜின் துயரத்தைப் பார்த்ததும் சாவினை நோக்கி, ஜார்ஜை விட்டுவிடச் சொல்கிறார்கள். ம்ஹூம்; சாவின் நகரவே இல்லை. கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் கழித்து சக காவலர்கள் சொன்னதும்தான் சாவின் நகர்கிறார். ஆனால், அதற்கும் முடிந்துவிட்டது. ஜார்ஜ் ஃப்ளாய்டு இறந்துவிட்டார்; டேர்னெல்லா அத்தனையையும் தன் மொபைலில் பதிவு செய்துவிட்டார்.
ஜார்ஜின் முதலாம் ஆண்டு நினைவையொட்டி தன் இன்ஸ்டாவில் இந்த தருணங்களை நினைவுகூர்ந்த டேர்னெல்லா, ``இன்றோடு நான் அந்த கொலையைப் பார்த்து ஒரு வருடம் ஆகிவிட்டது. கொல்லப்பட்டவரின் பெயர் ஜார்ஜ் ஃப்ளாய்டு. ஒரு கறுப்பினத்தவர் கொல்லப்படுவதை பார்ப்பது அது முதல்முறை இல்லைதான். ஆனால், அதை கண்முன்னே நேரில் பார்ப்பது அதுவே முதல்முறை. எனக்கு அவர் யாரெனத் தெரியாது; ஆனால், அவரின் உயிர் மிகவும் முக்கியம் எனப் புரிந்தது. அவர் வலியில் இருக்கிறார் என்பது புரிந்தது. அவர் எந்தவித அதிகாரமும் இன்றி, ஆபத்தில் இருக்கும் இன்னொரு கறுப்பினத்தவர் என்பதும் புரிந்தது. அந்த சம்பவம் நடந்தபோது என் வயது வெறும் 17தான். அன்று நான் கண்ட அந்த சம்பவம் என் வாழ்க்கையையே மாற்றும் என அப்போது தெரியாது. ஆனால், அதன்பின்பு அதுதான் நடந்தது. அந்த சம்பவத்திற்குப் பின் நான் வாழ்க்கையைப் பார்க்கும் விதம் மாறியது. அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சார்ந்தவராக இருப்பது எவ்வளவு ஆபத்தானது எனப் புரிந்தது. எங்களைக் காப்பதற்காகவே பணியில் இருக்கும் காவல்துறை அதிகாரிகளிடம் எவ்வளவு கவனமாக நாங்கள் இருக்கவேண்டும் எனப் புரிந்தது. ஏனெனில், அவர்களால் நாங்கள் திருடர்களாகவோ, குற்றவாளிகளாகவோ அல்லது விலங்குகளாகவோதான் பார்க்கப்படுவோம். இது அத்தனைக்கும் காரணம் எங்களின் தோலின் நிறம் மட்டும்தான். ஏன் கறுப்பினத்தவர்கள் மட்டுமே இப்படி பார்க்கப்படுகின்றனர்?" எனக் கூறியிருக்கிறார்.
``பலரும் என்னை ஹீரோ என்கின்றனர்; ஆனால், நான் என்னை அப்படி நினைத்ததேயில்லை. நான் சரியான தருணத்தில், சரியான இடத்தில் இருந்தேன்; அவ்வளவுதான்! ஒருவேளை நான் அந்த வீடியோவைப் பதிவு செய்யாமல் இருந்திருந்தால், இந்த உலகத்திற்கு அங்கே என்ன நடந்தது என்ற உண்மை தெரியாமலே போயிருக்கலாம். அதை நினைத்து மட்டும் நான் பெருமைகொள்கிறேன். என் வீடியோ ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரணத்தைத் தடுக்கவில்லை; ஆனால், அவரைக் கொலை செய்வதற்கு தண்டனை பெற்றுத்தந்திருக்கிறது." என தன்னுடைய பங்களிப்பு குறித்தும் நினைவுகூர்ந்திருக்கிறார்.
இப்போது மீண்டும் மினியாபொலிஸின் வீதிகளுக்குச் செல்வோம். 2020-ல் ஜார்ஜ் ஃப்ளாய்டு கொலைசெய்யப்பட்டதும் இந்த தகவல் தீயாகப் பரவியது. பதற்றத்தைத் தணிக்க அப்போது மினியாபொலிஸ் காவல்துறை இந்த சம்பவம் குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில், அதிகாரிகளின் வன்முறை குறித்து எதுவுமே இல்லை. மாறாக அதில் சொல்லப்பட்டதெல்லாம், ``குற்றவாளியை அதிகாரிகள் கை விலங்கிட்டதும் அவர் உடல்நிலை சரியில்லை என்பது புரிந்தது; உடனே ஆம்புலன்ஸ் வரவைக்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கே மருத்துவமனையில் அவர் இறந்துவிட்டார். இந்த சம்பவத்தில் ஆயுதங்கள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை. அதிகாரிகள் யாரும் காயம் அடையவில்லை!".
இவ்வளவுதான் அதில் இருந்தது. இதைத்தான் ஊடகங்களும் செய்தியாக்கின. ஆனால், அதன்பின்புதான் டேர்னெல்லாவின் வீடியோ வெளியானது. காவல்துறையின் கதைகள் சுக்குநூறாகின. ஜார்ஜின் இறுதி வார்த்தைகளான, ``I can't Breathe!" மக்களைக் கொந்தளிக்கச் செய்தது. பல்லாண்டுகாலமாக காவல்துறையால் அடக்குமுறைகளைச் சந்தித்துவரும் கறுப்பின மக்களை வீதிகளுக்கு அழைத்து வந்தது. அதன்பின்தான் #BlackLivesMatter (BLM) வரலாறானது. உண்மையில் டேர்னெல்லாவின் வீடியோ இங்கே செய்தது என்ன?
Black Witnessing என்பது 2020-ல் அல்ல; கடந்த நூற்றாண்டிலிருந்தே கறுப்பின மக்கள் கைக்கொண்ட ஒரு போராட்ட முறை. இந்த Black Witness-ன் முக்கிய நோக்கமே கறுப்பினர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளைப் பதிவு செய்வதுதான். எழுத்தாகவோ, வீடியோவாகவோ; எதுவாகினும் சரி. அதிகார வர்க்கம் தங்கள் மீது நடத்தும் வன்முறைகளை ஆவணப்படுத்துவதும், அவற்றை வரலாற்றின் சாட்சிகளாக்குவதுமே இதன் நோக்கம். கறுப்பின மக்களுக்காக கடந்த நூற்றாண்டில் இதற்காக நடத்தப்பட்ட பத்திரிகைகள் இந்தப் பணியைச் செய்தன. அதன்பின் வீடியோ கேமராக்கள் வந்ததும் அதன்மூலம் இவற்றைச் செய்தனர். ஆனால், இவை எதுவும் பெரியளவில் மாற்றங்களைக் கொண்டுவந்துவிடவில்லை. அவ்வப்போது சில சம்பவங்கள் அதிர்வலைகளை ஏற்படுத்துவதோடு சரி; ஆனால், இது இன்டர்நெட் வருகைக்குப் பின் வேகமாக மாறியது. சாமானியர்களின் கையில் இருந்த ஸ்மார்ட்போன்களே அடக்குமுறைகளின் சாட்சிகளாகின. எங்கெல்லாம் ஊடகங்களின் கேமராக்களின் ஒளி பாயவில்லையோ, அங்கெல்லாம் இவர்களின் ஸ்மார்ட்போன்கள் அந்த வேலையைச் செய்தன. ஆனாலும்கூட இந்தக் கொடுமைகளுக்கு எதிராகப் பெரியளவில் எதுவும் செய்யமுடியவில்லை. காரணம், அவர்களுக்கு சாதகமில்லாத சட்டங்கள், அதிகமாக வெள்ளையின மக்களே இடம்பெற்ற பிரபல ஊடகங்களின் பாராமுகம், பொது சமூகத்தின் ஆதரவின்மை, இப்படிப்பல.
இந்த Black Witnessing-ன் முக்கிய நோக்கமே தங்கள் தரப்பு நியாயத்தை பொது சமூகத்தில் வைக்கவேண்டும் என்பதுதான். அதிகாரங்கள் சொல்லும் கட்டுக்கதைகளுக்கு பதிலடி கொடுக்கவேண்டும் என்பதுதான். ஆனால், இவை எல்லாம் எப்போதும் நடந்துவிடுவதில்லை. இதற்கான ஊடகங்களை வைத்தே சொல்லலாம். ஜர்னலிசத்தின் பணியானது, எது உண்மையோ, அதை ஆதாரங்களோடு மக்களுக்குச் சொல்வது. ஆனால், காவல் துறை தொடர்பான செய்திகளில் என்ன நடக்கிறது? பெரும்பாலும் காவல்துறை தரப்பினர் சொல்லும் கதைகளே உண்மையாகக் கருதப்பட்டு செய்திகளாக்கப்படுகின்றன. உண்மை என்ன எனத் தெரியாதபோது, இரு தரப்பின் நியாயங்களையும் பதிவுசெய்வதே அந்த நேரத்து நியாயமாக இருக்கமுடியும். ஆனால், காவல்துறையின் பதில்கள் உண்மைகளாகவே ஊடகங்களால் கருதப்படுவதால் பிற தரப்பினரின் குரல்கள் நம் காதுகளில் விழுவதே இல்லை. இதனால் பாதிக்கப்படுவது அதிகாரமற்ற சாமானியர்களும், விளிம்புநிலை மக்களும்தான். ஜார்ஜ் ஃப்ளாய்டும் அப்படிப்பட்ட ஒருவர்தான். ஜார்ஜ் கொலை செய்யப்பட்ட பின்பு, வழக்கம்போல காவல்துறை கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டது. ஊடகங்களும் அதை செய்தியாக்கின. அதன்பின்பு டேர்னெல்லாவின் வீடியோ வராமலேயே போயிருந்தால் ஜார்ஜும் மற்றுமொரு குற்றவாளியாகவே வரலாற்றில் மறைந்திருப்பார். வழக்கம்போல காவல்துறை அதிகாரிகள் தங்கள் செயல்களுக்கு எந்தவித தண்டனையும் இன்றி தப்பியிருப்பர். டேர்னெல்லா சொன்னதுபோல நமக்கு கடைசி வரை உண்மை என்னவென தெரியாமலேயே போயிருக்கும். இப்படி டேர்னெல்லாவின் வீடியோ அதிகாரத்தின் பொய்ப் பிரசாரத்தை உடைத்ததோடு, காவல்துறை/ராணுவங்கள் தரப்பிலிருந்து வரும் செய்திகளை ஊடகங்கள் கையாள வேண்டிய விதத்தையும் மறுஆய்வு செய்யவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளியது.
மேலும், இதுபோல காவல்துறையினரின் அடக்குமுறைகளுக்காக அதிகாரிகள் மீது வழக்குகள் பதியப்பட்டாலும் அவர்களுக்கு தண்டனை கிடைப்பது என்பது அரிதாகவே இருந்தது. ஆனால், ஜார்ஜ் வழக்கில் சாவின் தண்டனை பெற்றதற்கு டேர்னெல்லாவின் வீடியோதான் முக்கியமான காரணமாக இருந்தது.
சரி, புலிட்சருக்குத் தகுதியானவர்தானா டேர்னெல்லா?
ஜார்ஜ் ஃப்ளாய்டு வழக்கில் சாட்சியாக ஆஜரான டேர்னெல்லா நீதிபதியிடம் இந்த சம்பவம் குறித்து சாட்சியம் அளித்தார். அப்போது, ``பல இரவுகளின் நான் ஜார்ஜ் ஃப்ளாய்டிடம் திரும்பத் திரும்ப மன்னிப்பு கேட்டிருக்கிறேன். நான் காவல்துறையோடு போராடி அவருக்கு நடந்ததைத் தடுத்திருக்க வேண்டும் என நினைத்து. ஆனால், உண்மையில் இங்கு நான் என்ன செய்யவில்லை என்பது முக்கியமில்லை. சாவின் என்ன செய்தார் என்பதுதான் முக்கியமானது" எனக் கண் கலங்கினார்.
டேர்னெல்லா நினைத்திருந்தாலும் அந்த அதிகாரிகளைத் தடுத்திருக்க முடியாது. அமெரிக்காவின் யதார்த்தம் இதுதான். ஆம், உண்மையில் டேர்னெல்லா ஜார்ஜிடம் மன்னிப்பு கேட்கத் தேவையில்லை. காரணம், அந்த ஒற்றை வீடியோவால்தான் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. காவல்துறை, நீதித்துறை, ஊடகங்கள், அரசாங்கம், கார்பரேட் நிறுவனங்கள் என அனைத்தும் தங்கள் செயல்களை இந்த உண்மையை வைத்து மறுபரிசீலனை செய்துகொண்டன. ஆங்காங்கே எழுந்துகொண்டிருந்த அடக்குமுறைகளுக்கான எதிரான குரல்கள் இன்று உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன. கட்டுரையின் தொடக்கத்தில் பார்த்ததுபோல அமெரிக்க தேர்தல், கோவிட் இரண்டையும் தாண்டி ஊடகங்கள் கறுப்பின மக்களைப் பேசுவதற்கும் அதுவே காரணமானது. அது புலிட்சரிலும் எதிரொலித்தது. இவை அத்தனையும் டேர்னெல்லா அங்கு இல்லாமல் போயிருந்தால் சாத்தியமே இல்லை.
``ஜார்ஜ் ஃப்ளாய்டு கொலை செய்யப்பட்ட வீடியோவானது உலகம் முழுக்க காவல்துறையின் அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்கள் பரவ காரணமானது. அதை துணிச்சலாகப் பதிவு செய்ததற்கும், நிருபர்களின் உண்மை மற்றும் நீதிக்கான தேடலில் குடிமக்களின் பங்கை உணர்த்தியமைக்கும்தான் இந்த விருது!" எனக்கூறித்தான் டேர்னெல்லாவை கௌரவித்திருக்கிறது புலிட்சர் குழு.
ஜர்னலிசம் வரலாற்றில், முதல்முறையாக ஒரு Citizen Journalist-ற்க்கு கிடைத்திருக்கும் முக்கியமான அங்கீகாரம் இது.